For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”தென்மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குக” - தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

01:23 PM Dec 18, 2023 IST | Web Editor
”தென்மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குக”   தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
Advertisement

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளும்,  அணைகளும், நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளநீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதுவரை நிரம்பாத பாபநாசம்,  சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நேற்று ஒருநாளில் பெய்த மழையில் முழு கொள்ளளவை எட்டி, வெள்ளநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும்,  மழை வெள்ள நீரும் அனைத்துப் பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வெளியே வரமுடியாமல் அவதியுறுவதாகவும்,  பொதுப் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தில் இன்று காலை 10 மணி நிலவரப்படி மிக அதிகபட்சமாக 96 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் 25 முதல் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி தொடர்வதாகவும், இதன் காரணமாக தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும்,  மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்டையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளதாகவும்,  கனமழை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரில் மூழ்கியுள்ளது என்றும், கட்டுபாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த வாரம் 'மிக்ஜாம்' புயலின் காரணமாக கன மழை பெய்தது.  ஆனால்,  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் மழை பெய்த 2 முதல் 3 நாட்கள் வரை இம்மாவட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை.

அதுபோல் இப்போது நடந்துவிடக்கூடாது என்றும்,  இக்கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்கு அதிக அளவு முகாம்களை தொடங்கிட வேண்டும் என்றும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கும் மற்றும் வெள்ளத்தால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வர இயலாத அனைத்து மக்களுக்கும் உடனடியாக உணவு, உடை, போர்வை,  அரிசி,  மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுடன் பால், குடிநீர், ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள்,  மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கிட  அரசை வலியுறுத்துகிறேன்.

அரசின் உதவிகள்,  நிவாரணம் வரும் வரை காத்திராமல் ஆங்காங்கே உள்ள அதிமுக நிர்வாகிகள்,  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உணவு, உடை, போர்வை, பால், ரொட்டி, குடிநீர் போன்ற நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு நிவாரண உதவிகள் வழங்கும்போது அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும்,  பாதிக்கப்பட்டுள்ளோர் குடியிருப்புகளுக்கே நேரில் சென்று நிவாரணங்களை வழங்கிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டுமாய் அதிமுக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக் குறைவுடன் மக்களை பாதிக்கப்படவிடாமல்,  மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களைப் பயன்படுத்தி,  சீர்குலைந்த சாலைகள்,  தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.  மேலும், கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Advertisement