For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொட்டும் மழையில் போராட்டம் | சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், #Samsung தொழிலாளர்கள் கைது!

01:15 PM Oct 09, 2024 IST | Web Editor
கொட்டும் மழையில் போராட்டம்   சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன்   samsung தொழிலாளர்கள் கைது
Advertisement

சாம்சங் நிறுவனத்தைக் கண்டித்து கொட்டும் மழையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் மற்றும் சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கடந்த ஒருமாதமாக CITU தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேற்று நள்ளிரவில் சென்ற போலீசார், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் போராட்ட திடல்களில் இருந்த பந்தல்களையும் அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து இன்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கவிருந்த நிலையில் இந்த கைது நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம். தென்கொரிய நிறுவனமான இதில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிறுவனம், குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அதிக வேலை வாங்குவதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பல மணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் , தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு , சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது என்றும், தமிழ்நாடு அரசு அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement