பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருதா? மியூசிக் அகாடமி ஆண்டு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த பெண் இசை கலைஞர்கள்!
டி.எம்.கிருஷ்ணா பெரியாரை போற்றுவதால் மியூசிக் அகாடமி ஆண்டு விழாவை புறக்கணிப்பதாக இசைக் கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி அறிவித்துள்ளார்.
சங்கீதம் அனைவருக்கும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்கால கர்நாடக சங்கீத வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர் மகாசேச விருதுபெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி. எம்.கிருஷ்ணா. மேடை கச்சேரிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி, கேட்டு வந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மார்கழி கச்சேரிகளுக்குப் பதில் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை‘ முன்னெடுத்தவர்.
இந்நிலையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த வருடம் நடைபெற உள்ள 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டில் டி.எம் கிருஷ்ணாதான் தலைமை தாங்க உள்ளார்.
“2024ம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை. அதேபோல டிசம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் இசைக் கச்சேரியில் பாடுவதில் இருந்தும் விலகுகிறோம். இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகின் மீது தவறான பிம்பங்களை கட்டமைத்து அதனை அவ்வபோது சேதப்படுத்தி வருகிறார்.
பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது. எனவே இந்த விழாவை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டால் அது நாம் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.