பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!
படித்து பட்டங்கள் பெறுகிறோம். படிக்காமலும், படித்தும் தங்கள் செயல்பாடு சார்ந்தோ சாராமலோ பெரும் பட்டங்களை கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். பெயருடன் பட்டங்கள் இல்லா அரசியல் தலைவரை காண்பதரிது. அவரவர் சாதனைகளுக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களும் பல்கலைக்கழகங்களால் அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக போராடியதால் படிப்பின் மூலம் பெறும் பட்டத்தையும் பெறாமல், அரசியல் வாழ்வில் எடுத்துக்காட்டாக படோபடமான பட்டங்களையும் கொண்டிராமல், பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார் என்.சங்கரய்யா.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாபசந்திரன், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நரசிம்முலு - ராமானுஜம் தம்பதியினருக்கு 1922 ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவரது தாத்தா சங்கரய்யாவின் விருப்பத்தின்பேரில், பிரதாபசந்திரனுக்கு சங்கரய்யா என மீண்டும் பெயர் சூட்டப்பட்டது. 1930-ம் ஆண்டு அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்த நிலையில், 1937-ம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்க்கப்பட்டார். சுதந்திர போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டத்தில், தேசிய உணர்வுடன் போராட்டங்களில் ஈடுபட்ட சங்கரய்யா, இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் கலந்துகொண்டிருந்தார்.
சிறைவாசத்தால் இழந்த பட்டம்:
மதுரை மாணவர் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்த சங்கரய்யா, 1941-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்கன் கல்லூரியில் கூட்டம் நடத்தியதாக பிப்ரவரி 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். பி.ஏ. தேர்விற்கு 15 நாட்களே இருந்த நிலையில், சங்கரய்யா கைதுசெய்யப்பட்டதால், அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது.
சிறைவாசமே வாழ்வு:
மதுரையைத் தொடர்ந்து, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்ட சங்கரய்யா 1942 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட போது, அந்த இயக்கத்துடனான செயல்பாட்டால் திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கண்ணணூர் சிறைக்கும் பிறகு, தஞ்சாவூர் சிறைக்கும் மாற்றப்பட்ட சங்கரய்யா 1944-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போது, சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த சங்கரய்யா, 1951-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா, 1957-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
1964-ம் ஆண்டு நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, அதனை உருவாக்கியவர்களுள் ஒருவராக திகழ்ந்தார் சங்கரய்யா. 1965-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை மத்திய அரசு கைது செய்தபோது, சங்கரய்யாவும் கைதாகி 16 மாத கால சிறைவாசம் கண்டார்.
தீக்கதிரின் ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர், விவசாய சங்கத் தலைவர், 1995-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என பொறுப்புகளை வகித்தவர்.
முனைவர் பட்டம் மறுப்பு:
பெருவாழ்வு வாழ்ந்த சங்கரய்யாவிற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த போது, அதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் மறுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார் அமைச்சர் பொன்முடி. இப்படியான சூழலில்தான் முதுமையினால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் காலமானார் சங்கரய்யா. “மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத – குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துவதாக” சங்கரய்யாவின் இரங்கல் குறிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சம் தொட்ட பொதுவாழ்வு:
ராணுவ கட்டுக்கோப்போடு வாழ்வை வாழ்ந்த சங்கரய்யா, தன்னைவிட தனது கட்சியை முன்னிறுத்தினார். தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணம், தொழிலாளர்கள் உரிமைகள் என குரல் கொடுத்த சங்கரய்யா 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
தமிழ்நாடு அரசால் 2021-ம் ஆண்டு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்ட போது, அந்த விருதிற்கான முதல் தேர்வாக அறிவிக்கப்பட்டவர் சங்கரய்யா. சுதந்திரப் போராட்டத் தியாகி, கட்சி நாளிதழின் ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர், தொழிலாளர் உரிமைப் போராளியாகவும், தீண்டாமை எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம் என பல்வேறு முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட முதுபெரும் தலைவரான சங்கரய்யா, மக்களுக்கான போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டவர்.
தனக்கான வாழ்க்கை குறித்து சிந்தித்து பார்த்திருப்பாரா? என்ற அளவில் கொள்கைக்காக வாழ்ந்து பட்டங்களின்றி மக்கள் மனதில் மகுடம் சூடியவராயிருக்கிறார் சங்கரய்யா. இன்றைய அரசியல்வாதிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையிலும், அரசியலுக்கு வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற பாடத்தையும் கற்றுத்தந்து பிரியாவிடை பெற்றுள்ளார் சங்கரய்யா.
- இலா. தேவா இக்னேசியஸ் சிரில்
`சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டும். காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், அயோத்திதாசர், சீனிவாசராவ், ஜீவா போன்ற பல தலைவர்கள், வாழ்நாள் முழுவதும் போராடினார்கள். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து கேட்கிறேன், தீண்டாமைக் கொடுமைகளை அனுமதிக்கலாமா?
- சங்கரய்யா