சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மீண்டும் உயர்வு... எத்தனை சதவீதம் தெரியுமா?
சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்கிறது.
இதுதொடர்பான தீர்மானம் இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனுடன், சென்னை தீவுத்திடலில் 6.59 ஏக்கரில் சாலையோர பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வியாபாரிகள் குப்பைத் தொட்டி வைக்காமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பொது இடங்களில் திடக் கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ.5,000 ஆகவும், பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ,2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும், பொது இடத்தில் மரக் கழிவுகளை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதேநேரத்தில் மெரினா, அண்ணாநகரில் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.