அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதையே திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010 வரையிலான திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. அப்போது அவர் ரூ. 44.59 லட்சம் அளவுக்கு சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், வழக்கில் இருந்து தங்கம் தென்னரசுவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
அதேபோல், 2006ம் ஆண்டு முதல் 2010 வரையிலான திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது, 76.40 லட்ச ரூபாய் சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், வழக்கில் இருந்து அவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், இந்த இரு வழக்குகளின் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளை தாமான முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார். கடந்த மாதம் இந்த வழக்குகளில் விசாரணை தொடங்கியது.
இதையும் படியுங்கள் :“வினேஷின் வெற்றி பிரிஜ் பூஷன் சிங்கின் முகத்தில் விழுந்த அறை” – மஹாவீர் சிங் போகட் பேட்டி!
இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் - 7) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அதன்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்த கீழமை நீதிமன்றங்களின் உத்தரவை ரத்து செய்ததுடன், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் செப்டம்பர் 9 ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.