“பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” - மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்தது. இதன் விளைவாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நிவாரண நிதி வேண்டி கடிதம் எழுதினார். பிரதமர் மோடி தன்னை அலைபேசியில் அழைத்து புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து பேசியதாக தனது ட்விட்டர் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசிடம் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி தொடர்பாக அவசர நிலையில் விவாதித்து, நிதி விடுவிப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து நாடாளுமன்ற குளிர்கால இன்றைய கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு திமுக மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டுக்கான புயல் பாதிப்பு நிவாரண கோரிக்கை தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயலால் 14 மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் 1.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. அதேபோல கட்டுமானங்கள், பயிர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே மத்திய குழுவை அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ரூ.2000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் வைத்துள்ளார். அதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் இல்லாததால் நேரம் கிடைக்கவில்லை. பிரதமர் வந்தவுடன் அவரை சந்துத்து முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்குவோம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் கோரினோம். நம்பிக்கை அடிப்படையில் மீண்டும் கோரியுள்ளோம். ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகளை மத்திய அரசு பெறுகிறது. எனவே பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.