#ProKabaddiLeague | பாட்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா ஸ்டீலர்ஸ்!
புரோ கபடி லீக் போட்டியின் இறுதி போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
12 அணிகள் பங்கேற்ற 11வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த அக்.18ம் தேதி தொடங்கியது. இதில் லீக், நாக்-அவுட் சுற்று, அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பாட்னா பைரட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த இரு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி புனேவில் இன்று (டிச.29) நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. சாம்பியன் பட்டத்தை வெல்லும் எண்ணத்தில் இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக ஆடினர். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 15-12 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இரு அணி வீரர்களும் புள்ளிகளை குவித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதில் பாட்னா பைரட்ஸ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதி போட்டி வரை முன்னேறி கடைசியில் தோல்வியை சந்தித்தது பாட்னா பைரட்ஸ் அணி ரசிகர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது.