For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈஷா யோகா மைய வழக்கு #SupremeCourt -க்கு மாற்றம் - தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை!

12:27 PM Oct 03, 2024 IST | Web Editor
ஈஷா யோகா மைய வழக்கு  supremecourt  க்கு மாற்றம்   தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை
Advertisement

ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Advertisement

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விசாரணை செய்து முழுமையான அறிக்கையை நாளை (அக் 4) தாக்கல் செய்ய தமிழக சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து, கடந்த 2 நாள்களாக ஈஷா யோகா மையத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஈஷா யோகா மையம் தரப்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று (அக். 3) மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கோரிக்கை வைத்தார்.

அந்த வகையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, காமராஜின் மகள் லதா மற்றும் கீதா ஆன்லைன் மூலம் ஆஜராகி டெல்லி சட்ட சேவை மைய செயலாளரிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனை பதிவு செய்து சட்ட சேவை மைய செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

“அந்த பெண்கள் தங்கள் சொந்த விருப்பத்துடேனே ஆசிரமத்தில் தங்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் சுதந்திரமாக பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளோம் என கூறுகின்றனர். அவர்களின் வயது, முதிர்ச்சியான மனநிலை ஆகியவை மூலம் அவர்கள் ஆசிரமத்தில் தங்க கட்டாயப்படுத்தப்படவில்லை என தெளிவாகிறது. எனவே இரண்டாவது ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கக்கூடாது.

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு உள்ள வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. மேலும் மூல வழக்கு தொடுத்தவர் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. ஈஷா தொடர்பான காவல்துறை விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஈஷா மையத்தில் தமிழக காவல்துறை இதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக வழக்கு விசாரணையின் போது ஆஜரான இரு பெண்களும் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் ஈஷா மையத்தில் தங்கி சேவை புரிவதாகவும், தங்களது தந்தை வேண்டுமென்றே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து துன்புறுத்துவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement