For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை: அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா!

10:53 AM Apr 26, 2024 IST | Web Editor
விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை  அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா
Advertisement

விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது.

Advertisement

சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத் திறனை ரஷ்யா பெற்றுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை சார்பில் கூறப்பட்டது. தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ரஷ்யா மீது இந்த குற்றச்சாட்டை வைத்தார். ஆனால், அந்த ஆயுதம் அணுசக்தி திறன் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுக்கு புடின் மறுப்பு தெரிவித்து கூறியதாவது, “விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம். இதற்கு நேர்மாறாக இந்த துறையில் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்குமாறு அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார். 

இந்நிலையில், உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தக்கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கூட்டாகக் கொண்டுவந்தன. எனினும், சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்துசெய்தது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாஸிலி நெபன்ஸியா கூறுகையில், ‘விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் 1967-ம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் அபத்தம் நிறைந்ததாக உள்ளது. அனைத்துவகை ஆயுதங்களையும் விண்வெளியில் நிறுத்துவதைத் தடை செய்வதற்கான அம்சம் அந்தத் தீா்மானத்தில் இடம்பெறவில்லை” என தெரிவித்தார்.

எனினும், தீர்மானத்தை ரத்து செய்ததன் மூலம் ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு ரஷ்யா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. விண்வெளி சுற்றுப்பாதையில் அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்துவதை தடை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷ்யா உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement