தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கழுகுகள் உயிரிழப்பு : தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கழுகுகள் பலியாக காரணமாக உள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் தமிழ்நாட்டில்
விற்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய
மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட NIMUSLIDE, FLUNIXIN
மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளை விலங்குகளுக்கு செலுத்துவதாகவும்,
மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தை சாப்பிடும்
கழுகுகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. நான்கு மாவட்டங்களிலும் மூன்று
மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டுமென கோரி
சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்
பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட
மருந்துகள் இன்னும் கிடைப்பதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை
செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்படாத மேலும் மூன்று மருந்துகளை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடை செய்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும்
விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் :‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்.. டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் கொள்ளை!
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கால்நடைகளுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்க
வேண்டும் என்றால் மருந்து இல்லாமல் கால்நடைகள் உயிரிழந்தால் பாதிக்கப்படும்
விவசாயிகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதாக
மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும், மாற்று மருந்துகள்
குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட
நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.