புரோ கபடி லீக் | தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி!
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 46-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 8இல் வெற்றி பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 3வது இடத்திலும், 13 ஆட்டங்களில் 6இல் வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி யு மும்பாவை எதிர்கொண்டது.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் 37-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் வெற்றி பெற்றது. 13 ஆட்டங்களில் 10இல் வெற்றி பெற்ற புனேரி பால்டன் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 2வது இடத்திலும், 12 ஆட்டங்களில் 6இல் வென்ற யு மும்பா அணி 4வது இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- யுபி யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.