இன்று தொடங்குகிறது புரோ கபடி லீக் : தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்
இந்தியாவில் கிரிக்கெட், ஹாக்கி போன்று கபடியும் புகழ் பெற்ற விளையாட்டாகும். இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் சென்னை,மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2024 ஆண்டு சீசனில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
தொடரின் முதல் கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 11 வரை விசாகப்பட்டினத்திலும், இரண்டாம் கட்ட போட்டிகள்செப்டம்பா் 12 முதல் 28-ஆம் தேதி வரை ஜெய்ப்பூரிலும், மூன்றாம் கட்ட போட்டிகள் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 10 வரை சென்னையிலும், நான்காம் கட்ட போட்டிகள் அக்டோபா் 11 முதல் 23 வரை புது டெல்லியிலும் நடைபெறவுள்ளன. ‘பிளே-ஆப்’ சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி லீக் சுற்று ஆட்டங்கள் 108 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் லீக் சுற்றில் ஆட்டங்கள் சமனில் முடிந்தால் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய டைபிரேக்கர் முறையும் அறிமுகமாகிறது.