சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் இன்று(மார்ச்.25) நடந்த தேர்வில் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்தார்.
தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவிகள், தங்களிடம் சோதனை செய்த தேர்வு அறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் இது குறித்து தெரிவித்தனர். தகவலறிந்து உறவினர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பத்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் போக்சோ வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.