அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் கருவியை வழங்கிய தனியார் மருத்துவர்கள்!
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது பேரனை காப்பாற்றியதற்காக, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வென்டிலேட்டர் கருவியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிராம்பட்டினம் தனியார் குழந்தைகள் நல மருத்துவர் ஹாஜா மைதீன் என்பவரின் பேரக்குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குழந்தை சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முயற்சியில் அக்குழந்தை காப்பாற்றப்பட்டது .
இந்நிலையில், குழந்தையை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மருத்துவர் ஹாஜா மைதீன் மற்றும் அய்யாசாமி குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் ராம்பிரகாஷ் ஆகியோர் இணைந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் கம்ப்ரசர் கருவியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகனிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் உயிர் காக்கும் கருவி வழங்கிய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.