ராசிபுரம் அருகே தனியார் பேருந்து - லாரி மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!
ராசிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே கோரையாறு பகுதியில் பேருந்து வரும் போது, எதிரே வந்த லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதியும், லாரியின் முன் பகுதியும் அப்பளம் போல் நொருங்கியது.
இந்த விபத்தில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே முருங்கப்பட்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ரவி (56), பேருந்தில் பயணம் செய்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்த அலுமேலு(52), லாரி ஓட்டுநர் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி, பேருந்து இடிப்பாடுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர்களின் சடலத்தை பொக்கலைன் இயந்திர உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா ஆகிய இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர். இந்த கோரவிபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.