Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

03:23 PM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

ஜாமின் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமின் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, டி டி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ், தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும், 22 தண்டனைக் கைதிகளும், ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை எனவும், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமின் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜாமின் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமின் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலருக்கும் உத்தரவிட்டனர்.

அதேபோல, அரசு உதவித்திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags :
BailMadras High CourtPrisonersRelease
Advertisement
Next Article