பெயர் குழப்பத்தால் விடுதலை செய்யப்பட்ட கைதி - அமெரிக்க சிறையில் நடந்த சம்பவம்!
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகர சிறைச்சாலை, சமீபகாலமாக நிர்வாகக் குளறுபடிகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில், அங்கு அடைக்கப்பட்டிருந்த கலீல் பிரையன் (30) என்ற கைதியின் விடுதலை தொடர்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, கலீல் பிரையன் என்ற குற்றவாளியின் தண்டனை காலம் முடிவடைந்ததால், அவரை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், சிறை அதிகாரிகளின் கவனக்குறைவால், அதே பெயருடைய மற்றொரு கைதியை அவர்கள் தவறுதலாக விடுதலை செய்தனர். இந்த நிகழ்வு சிறை அதிகாரிகளுக்குள் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், விடுதலையான கைதிக்கு பதிலாக, அதே பெயரைக் கொண்ட வேறு ஒரு நபரை அதிகாரிகள் விடுவித்தது தெரியவந்தது. இந்த கவனக்குறைவான செயல், சிறைச்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கியது. இதன் விளைவாக, பணியில் அலட்சியமாக இருந்ததால் இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம், நியூ ஆர்லியன்ஸ் சிறையின் நிர்வாகத்தில் நிலவும் தொடர் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடந்துள்ள இந்தத் தவறு, சிறை நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது.
சிறை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து சிறை நிர்வாகம் இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.