40 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் மனிதக்குரங்கு... யார் இந்த புவா நொய்?
தாய்லாந்தின் ஒரு தனியார் மிருகக் காட்சி சாலையில், மனிதக்குரங்கு ஒன்று கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ளது.
சமூக விலங்குகள் என கருதப்படும் கொரில்லாக்கள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. இவை பொதுவாக குடும்பமாக வாழும். ஆனால் 'புவா நொய்' அல்லது ‘லிட்டில் லோட்டஸ்’ என்ற பெயருடைய பெண் மனிதக்குரங்கு கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. “உலகின் தனிமையான கொரில்லா” என்று கருதப்படும் புவா நொய் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் மிருகக்காட்சிசாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் உள்ள, தனியார் வளாகத்தின் 6 மற்றும் 7வது தளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ‘பாட்டா’ மிருககாட்சி சாலையில் 'புவா நொய்' சிறை பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு வினை செர்ம்சிரிமோங்கோல் என்பவரால் இந்த மிருகக்காட்சி சாலை திறக்கப்பட்டுள்ளது. 3 வயதில் சிறைபிடிக்கப்பட்ட புவா கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சிறையிலேயே உள்ளது.
புவா நொய்யை விடுவிக்க செர் மற்றும் கில்லியன் ஆண்டர்சன் போன்ற ஏ-லிஸ்ட் பிரபலங்களின் முயற்சிகள் உட்பட, உலகளாவிய கூக்குரல் இருந்தபோதிலும், அதற்கு மிருககாட்சி சாலை மறுப்பு தெரிவித்து வருகிறது. காரணம் புவா நொய் அங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவதால், அங்கிருக்கும் கடைகளுக்கும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கின்றது. இதனால், அதன் உரிமையாளர்கள் புவா நொய்க்கு பல ஆண்டுகளாக அந்த இரும்புக் கூண்டையே நிரந்தரமாக்கியுள்ளனர்.
ஒரு கொரில்லாவின் சராசரி ஆயுட்காலம் 40 ஆண்டுகள் என்பதால், புவா நொய் காடுகளுக்குள் விடப்படுவதற்கு முன்பு கூண்டிலே இறந்துவிடுமோ என விலங்கு நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். உயிரியல் பூங்காவின் தற்போதைய உரிமையாளர் கனிட் செர்ம்சிரிமோங்கோல், புவா நொய் மற்றும் பிற விலங்குகள் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளார். புவா நொய்யை விடுவிக்க செர்ம்சிரிமோங்கோலின் குடும்பத்தினர் ரூ.7.4 கோடி கோரியதாக தகவல் வெளியானதையடுத்து, மிருகக்காட்சிசாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “இன்றைய நிலவரப்படி, மிருகக்காட்சிசாலையின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள், புவா நோயை யாருடனும் அல்லது எந்த நிறுவனத்துடனும் வாங்கவோ அல்லது விற்கவோ ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்” என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தனர்.
தனிமையில் வாடும் இந்த மனிதக்குரங்கை மீட்டு, அதனை விடுதலை செய்வதற்காக விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீட்டா கடந்த 12 வருடங்களாக போராடி வருகின்றது. ஆனால் தற்போது வரை அது சிறையிலேயே உள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தனது 41வது கிறிஸ்துமஸ்ஸையும் சிறையிலேயே கழிக்க உள்ளது புவா நொய்.