“தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை” - அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று(மார்ச்.18) நடைபெற்று வருகிறது. இதில் துறைசார்ந்த பிரச்சனைகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவையின் கேள்வி பதில் நேரத்தில் பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், “திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, வற்றாத ஜீவ நதியில் மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் சேர்கிறது. அதில் குறைந்த பட்சம் 4, 5 இடத்தில் தடுப்பணை கட்டித்தர வேண்டும். என்று அமைச்சரை கேட்டுக்கொள்வதோடு சிற்றாறு மற்றும் கங்கை கொண்டான் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டித்தர வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இது நியாயமான கோரிக்கை. நம்மிடம் இருக்கும் வற்றாத நதி தாமிரபரணிதான். ஒரு காலத்தில் அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள சில தடுப்பணைகளில் தண்ணீர் நின்றுள்ளது. ஆனால், பெரு மழை வரும்போது சீரடைந்துள்ளது. அதை நான் பார்த்திருக்கிறேன். அவரின் கோரிக்கை மிக அத்தியாவசியமானது. எனவே தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமையளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.