பிரதமரின் வீடு கட்டும் திட்டம் : மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குறைப்பு!
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம் என்ற சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கும் குறைவான தனிநபர்களுக்கு ரூ.6 லட்சம் வீட்டுக் கடனுக்கு 6.5% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் குறைவான தனிநபர்களுக்கு ரூ.9 லட்சம் கடனுக்கு 4% வட்டி மானியம் கிடைக்கிறது.
ஆண்டு வருமானம் ரூ.18 லட்சத்துக்கும் குறைவான தனிநபர்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். இந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் வீட்டின் அளவு மற்றும் திட்டத்தின் காலத்திற்கு வெவ்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இந்நிலையில் இந்தவிதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி 120 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான வீடுகட்ட, வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். அதாவது, வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பலன் கிடைப்பதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல் நகரங்களில் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு குறைந்த வாடகையில் வீடுகளையும், பணிபுரியும் பெண்கள் விடுதிகளையும் கட்டுவதற்கு ஊக்கத்தொகை அளிக்கும் புதிய விதிமுறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.