பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26: விழுப்புரம் விவசாயிகளுக்கு அழைப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நெல், நிலக்கடலை மற்றும் கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குநர் திரு. இரா.சீனிவாசன் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்வதன் மூலம் எதிர்பாராத இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
மேலும் இது விவசாயிகளுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நெல்-I (நடவு) பயிர் செய்துள்ள விவசாயிகள் ஜூலை 31, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் நிலக்கடலை மற்றும் கம்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்பதும், விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததோடு மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.