பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் - 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
வாரணாசியில் நடைபெற்ற PM கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.
3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று ( ஜூன் -18) தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார். பிரதமராக பதவியேற்றப் பிறகு 17 ஆவது தவணை PM கிஷான் சம்மன் நிதியை வெளியிடுவதற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார். இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையும் படியுங்கள் : “ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி!
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது :
"சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க இத்தாலி சென்றேன். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். இந்த தேர்தலில் 31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டு உள்ளனர். தேர்தலில் அதிக பெண்கள் ஓட்டுப் போட்டது இந்தியாவில் மட்டுமே. இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக உள்ளது.
பிரதமர் விவசாய உதவி நிதி திட்டம் உலகின் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தால் 1 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 3.25 லட்சம் கோடி நிதி விவசாயிகளுக்கு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.
நமது பொருளாதாரம் வளர்வதில், விவசாயிகள் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளோம். பெண்களையும், விவசாயிகளையும் பலப்படுத்தவே எனது 3வது ஆட்சி காலத்தை துவக்கி உள்ளேன். 21ம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் பெரிய 3 வது பொருளாதார நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.