நெருங்கும் மக்களவை தேர்தல் - மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், கட்சி சார்ந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி வருகை தந்தார். கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ரோட் ஷோவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்தமிழ்நாட்டில் மகளிரை முன்னிலைப்படுத்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு பாஜக திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. குறிப்பாக கட்சியின் மகளிர் அணி சார்பில், மாவட்டத்திற்கு 2000 மகளிர் என மொத்தமாக ஒரு லட்சம் மகளிரை, பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரச் சொல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : அதிமுக உடனான தொகுதி பங்கீட்டில் அதிருப்தி - பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு சார்பில் மகளிர்க்காக தொடங்கப்பட்ட புதிய திட்டங்கள் பற்றி விளக்கும் விதமாக இப்பொதுக்கூட்டம் அமையும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பொதுக்கூட்டங்களில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.