உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை லீக் போட்டி முதல் அரையிறுதிப் போட்டி வரை தோல்வியே காணாமால் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த அதிர்ச்சித் தோல்வி இந்திய வீரர்களை மட்டுமல்லாது கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்திய வீரர்கள் பலரும் கண்களில் நீர் கசிய மைதானத்திலிருந்து உடை மாற்றும் அறைக்குச் சென்றனர்.
இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, உடை மாற்றும் அறைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது ஷமியை கட்டியணைத்து அவர் ஆறுதல் படுத்தினார். பின்னர், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜாவுடனும் பிரதமர் பேசினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைத்தளப் பதிவில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான இந்திய அணிக்கு, இந்த உலகக் கோப்பை முழுவதும் உங்களது திறமை மற்றும் உறுதியான ஆட்டம் சிறப்பாக இருந்தது. நீங்கள் சிறப்பாக விளையாடி நாட்டுக்குப் பெருமையை சேர்த்துள்ளனர். நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுடன் துணைநிற்போம் எனப் பதிவிட்டுள்ளார்.