கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று (மே 29) முடிவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30) முதல் 3 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றார்.
இந்நிலையில், வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.