பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வருகை தர உள்ளதையொட்டி, நகர் பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையால், திருச்சி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் திருச்சி விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் வந்து இறங்கி, அங்கிருந்து மாரியாட் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார்.
அங்கு தங்கிவிட்டு மீண்டும் விமான நிலையம் புறப்பட்டுச் செல்லும் பாதையில் உள்ள அனைத்து முக்கிய உயர்ந்த கட்டிடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் ஆகியவை முழுவதும் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாரியாட் நட்சத்திர விடுதியில், வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி முழுவதும் முழுமையாகச் சோதனையிடப்பட்டு, தற்போது காவல்துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
விடுதிக்கு அருகாமையில் உள்ள இல்லங்கள் மற்றும் பிரதமர் வரும் பாதைகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் திருச்சியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் துறையினருடன், சிறப்பு அதிரடிப்படை, தேசிய பாதுகாப்புப் படை (NSG), வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கியச் சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொது இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. ட்ரோன்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் செல்லும் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி செல்ல மாற்றுப் பாதைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் பாதுகாப்பு கருதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகை குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.