ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் பிரகாரத்தில் உள்ள மஹாலக்ஷ்மி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், யமுனா தீர்த்தம் உள்ளிட்ட 22 புண்ணிய தீர்த்தங்களில் பிரதமர் நரேந்திர மோடி நீராடினார்.
இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார்.
பிரதமர் மோடி, தமிழர்களின் பாரமரிய வேட்டி சட்டை அணிந்தபடி ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார். ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்து வந்த நிலையில் புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் கம்பராமாயணத்தை பாராயணம் செய்ய அதனை அமர்ந்து கேட்டார்.
இதையும் படியுங்கள் : அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியானது!
இதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்புவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக கோயில் வரும் வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவியும் ஆரவாரம் செய்தும் வரவேற்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதசாமி திருக்கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே உள்ள ராமகிருஷ்ணா மடத்தின்பு சென்று விட்டு பின் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தகிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண கதாவில் கலந்து கொண்டார்.
பிரதமரின் வருகையொட்டி ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி நாரேந்திரன் நாயர், தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை மற்றும் எஸ்பிகள் தலைமையில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதமர் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் அரிச்சல் முனை கடலில் புனித
நீராடுவதால் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய
கடற்படை, கடலோர காவல் படை, மெரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் பிரதமர் செல்லும் வழித்தடம், தங்கும் இடமான ராமகிருஷ்ண மடம்,
திருக்கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள்
மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில்
ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான இடங்களில்
கூடுதல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்
பாதுகாப்பு நலன் கருதி சனிக்கிழமை காலை 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
ராமேஸ்வரத்தில் இருந்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாளை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்து நிறுத்தம்
செய்யப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் தீவு முழுவதும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புனித நீராடி கோதண்டராமன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார்.