மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின் முதல்முறையாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி!
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக நாளை பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்ற 50-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்று வந்தார்.
இந்நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி நாளை (ஜூன் 18) செல்ல உள்ளார். அங்கு, விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி விவசாய நிதியை வழங்கவுள்ளதாகவும், தொடர்ந்து அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உதவி திட்டத்தின் கீழ் தற்போது வரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தவணையாக ரூ.20,000 கோடி வழங்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.