For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

12:36 PM May 30, 2024 IST | Web Editor
இன்று கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடி   பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக இன்று கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் மாலையுடன் நிறைவடையும் நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி நாளை  இன்று முதல் 3 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். தேர்தலுக்கு முன்னர் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றுள்ளார்.

கன்னியாகுமரியின் கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பின் (ஜூன் 1) பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என கூறப்படுகிறது.

இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.

அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும். மற்றொரு அறையில் சமையல் அறையும் மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், 4 டி.ஐ.ஜி.கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement