ஜூன் 12-ல் புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட சாலை பேரணி!
வரும் 12-ம் தேதி ஒடிசா தலைநகரம் புவனேஸ்வரில் பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தி அங்கிருந்து நேரடியாக பதவியேற்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இம்முறை பெறவில்லை. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து, ஆட்சியையும் பறிகொடுத்தது. இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வரும் 12ம் தேதி ஒடிசா மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக ஒடிசா தலைநகரம் புவனேஸ்வரில் பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக சாலை பேரணியை நடத்தி அங்கிருந்து நேரடியாக பதவியேற்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி செல்கிறார்.