அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் பேரணி!
அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் பதாகைகள் மற்றும் பாஜக கொடிகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், அட்லாண்டா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன், கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பிரபலமான 16 நகரங்களின் முக்கிய இடங்களில் ‘மோடியின் குடும்பம் பேரணி’ என்ற பெயரில் நேற்று முன்தினம் (ஏப். 7) நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜகவின் அமெரிக்கா பிரிவு ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடைபெற்றது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மகாராஷ்டிரா முதல் வடகிழக்கு வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் பேரணியில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். குடும்பத்தினருடன் பேரணியில் பங்கேற்ற மக்கள், காவி நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட கொடிகள், பதாகைகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கான புலம் பெயர்ந்த இந்தியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தற்போதைய அரசின் கொள்கைகளுக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வம்சாவளியினரும் புலம்பெயர்ந்த இந்தியர்களும் பாஜகவுக்கு ஆதரவளிக்க ஆர்வமாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீதான நம்பிக்கையையும் ஒற்றுமையுணர்வையும் இது வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.