ராமர் கோயில் அஞ்சல் தலை, அஞ்சல் உறைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளையும், ராமர் பற்றிய அஞ்சல் உறைகள் அடங்கிய புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அன்று பிரதமர் மோடி குழைந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்விற்கு பல முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.
ராமர் கோயில், சூரியன், சரயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தினார். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய அஞ்சல் உறைகள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.