அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பு நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தனது அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெற்ற வெற்றிகளை தொடர இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
Landed in Washington DC a short while ago. Looking forward to meeting @POTUS Donald Trump and building upon the India-USA Comprehensive Global Strategic Partnership. Our nations will keep working closely for the benefit of our people and for a better future for our planet.… pic.twitter.com/dDMun17fPq
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
அத்துடன் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவும் இது உதவும். தனது நண்பர் டிரம்புடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை தான் மிகவும் அன்புடன் நினைவில் கொண்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.