Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்” - கனிமொழி எம்.பி!

10:19 PM Mar 04, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டில் பல இடங்களில் திமுக சார்பில் "எல்லோருக்கும் எல்லாம்"  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோட்டில் நடைபெறும் "எல்லோருக்கும் எல்லாம்" பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“பெரியாரின் பெயரை கூறினால் சிலருக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. மதத்தை வைத்து குளிர்காய நினைப்பவர்களுக்கு அவ்வாறு உள்ளது. பெரியாரின் சிலையில் காவி கலர் அடிப்பது பார்க்கும் போது அவரின் செயல்களை அவர்கள் மறுக்கவில்லை என தெரிகிறது. கருணாநிதியின் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கு படிப்புகள் பாதியில் நிறுத்தும் நிலை இருந்த போது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி பத்தாம் வகுப்பு வரை கருணாநிதி படிக்க வைத்தார்.

கேஸ் அடுப்பு வழங்குவதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், பெண்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என சிந்தித்தவர் கருணாநிதி. பத்தாம் வகுப்பு தாண்டி, கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு தடை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

கட்டணமில்லா பேருந்து வசதி மூலம் வீட்டில் இருந்த பெண்கள் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். பண்டிகை காலங்களில் கூட ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருந்த சகோதரிகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சி மதத்தை பயன்படுத்தி மக்களை பிரித்து ஆளக்கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மணிப்பூரில் ஏற்பட்ட பிரச்சனை இதுவரை சரிசெய்ய முடியவில்லை. அங்கே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமருக்கு அங்கு செல்ல நேரமில்லை.

தேர்தல் வருவதால் அடிக்கடி மோடி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழ்நாட்டில் குடியேறினாலும் அவருக்கு நம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் தனிப்பட்ட நம்பிக்கை உள்ளது. அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பாதுகாக்க வேண்டும். இந்து மக்களில் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த சாதாரண மக்கள் மருத்துவம் படிக்காத அளவிற்கு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும், இந்துக்கள் என்றால் மேல்ஜாதி என்பவர்கள் மட்டும் தான் என நினைக்கிறார்கள்.

சிஏஏ திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடினார்கள். தொழிலாளர் சட்டத்திற்கு எதிராகவும் போராடினார்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த மசோதா எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அரசு பதவிகளில் கருணாநிதி கொண்டு வந்த பெண்களுக்கான இடஒதுக்கீடை மு.க.ஸ்டாலின் அதிகப்படுத்தியுள்ளார். மக்களை ஏமாற்றி விடலாம் என நினைத்து ஆட்சி செய்பவர்கள் தான் மத்திய பாஜக. இந்த பகுதியில் அதிகமாக உள்ள ஜவுளி தொழிலை மேம்படுத்துவதற்காக தொழில் பூங்கா துவங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வரவில்லை.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி பணத்தை மட்டுமே மத்திய அரசு தருகிறது. மீதமுள்ள பணத்தை மாநில அரசு தருகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு பெயர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம். இந்த நிதிநிலை அறிக்கையில், பெருந்துறையில் 100 படுக்கை வசதிகளுடன் மருத்துவனை மேம்படுத்தப்படும் என நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது திமுக ஆட்சி. இளைஞர்களுக்கு தமிழ் புதல்வன் திடடத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்பது போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் பணமதிப்பிழப்பு செய்தார்கள். அதன் மூலம் இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறினார்கள்.  ஆனால், அதற்கு மாறாக மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தார்கள். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என கூறியிருப்பது துக்ளக் ஆட்சி போல் உள்ளது. ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலம், தொழில் முனைவோர்கள் உட்பட அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு, சிறுகுறு தொழில்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் அதானி, அம்பானியின் வருமானம் மட்டும் தான் அதிகரித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தான் மிகப்பெரிய ஊழல். அதனை சட்டமாக்கி யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தெரியாது. தேர்தல் முடியும் வரை யார் பணம் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியாது என கூறி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் ஊழல் தெரிகிறது. போராடும் மக்களை, எதிர்கட்சி மற்றும் ஊடக துறையினர் என அத்தனை பேரையும் அச்சுறுத்தி சர்வதிகார ஆட்சி தான் மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சி. அவர்களிடமிருந்து நம் நாட்டை பாதுகாக்கும் கடமை உள்ளது. மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்க, சுயமரியாதையோடு வாழ இந்த தேர்தல் என்பது அரசியலுக்கான தேர்தல் மட்டுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Tags :
BJPDMKelection 2024Kanimozhi MPNarendra modiParlimentary Election
Advertisement
Next Article