ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் மோடி 15 -ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி இன்று ஜப்பான் தலை நகர் டோக்கியோ சென்றடைந்தார்.
இந்த பயணத்தில் பிரதமர் மோடி ஆக. 29, 30 ஆகிய இரு நாட்களில் 15-ஆவது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த சந்திப்புன்போது பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து ஆக. 31 ஜப்பானிலிருந்து சீனா செல்லும் பிரதமர் மோடி அங்கு டியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார்.
இந்த பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறேன்.
எனது இந்த பயணம் இருநாட்டு நாகரிக பிணைப்புகள் மற்றும் நமது மக்களை இணைக்கும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
ஜப்பானில் இருந்து, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறேன். இந்தியா எஸ்சிஓவின் தீவிரமான மற்றும் ஆக்கபூர்வமான உறுப்பினராக உள்ளது. உச்சிமாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஜப்பான் மற்றும் சீனாவிற்கான எனது பயணங்கள் நமது தேசிய நலன்களையும் முன்னுரிமைகளையும் மேம்படுத்தும் என்றும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதில் பயனுள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப பங்களிக்கும் என்றும் நான் நம்புகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.