3 நாள் பயணமாக #Poland புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.
மேற்கு ஐரோப்பிய நாடான போலந்திற்கு 2 நாள் செல்லும் பிரதமர் அடுத்து அங்கிருந்து ரயிலில் 10 மணி நேரம் பயணித்து 23ஆம் தேதி உக்ரைன் செல்கிறார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசும் பிரதமர் மோடி ரஷ்யாவுடன் நீடித்து வரும் போருக்கு அமைதியான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
பிரதமரின் இப்பயணம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மைல் கல் பயணம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மோடி 3ஆம் முறை பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். இது அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் பிரதமர் உக்ரைன் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஜி7 மாநாட்டில் மோடியை சந்தித்த செலன்ஸ்கி உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
உக்ரைனில் போருக்கு பின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்குள் செல்ல ரயில் பயணமே உகந்ததாக உள்ளது. இதற்கு முன் உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மன் தலைவர் ஓலஃப் ஷோல்ஸ் ஆகியோரும் போலந்திலிருந்து ரயில் வழியாகவே உக்ரைன் சென்றிருந்தனர். டிரெய்ன் ஃபோர்ஸ் ஒன் என்ற இந்த ரயில் சொகுசு வசதிகளுடன் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டதாகும்.