3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி - திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!
பிரதமர் மோடி 3வது முறையாக தமிழ்நாடு வருகை தர உள்ளதாகவும் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்ற பிரதமர், கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் சென்றார். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். அதன்பின் ராமசாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் அங்குள்ள 22 கிணறுகளில் புனித நீராடினார்.
இதன்பின்னர் அரிச்சல்முனைக்கு சென்ற பிரதமர் மலர்கள் தூவி வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின் 3நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற பிப்ரவரி மாதம் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார். இதன் மூலம் 2024ம் ஆண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். இப்பயணத்தின் போது திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி ஜனவரி 28ஆம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், பிரதமர் வருகையால் தற்பொழுது வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் பிரதமர் வருகை குறித்த முழு விபரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.