பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘The Order of Mubarak Al-Kabeer’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார். இதன் மூலம் 43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். கடந்த 1981-ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றார். குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு சென்றார். நேற்று குவைத் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘The Order of Mubarak Al-Kabeer’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி பெரும் 20வது சர்வதேச விருதாகும். ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாளமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடி இந்த விருதை பெற்றுள்ளார்.