For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அப்பட்டமாக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

01:10 PM Mar 06, 2024 IST | Web Editor
 அப்பட்டமாக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி    முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அப்பட்டமாக பொய் பேசிவிட்டு சென்றுள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநில அரசுக்கு நிதி ஒதுக்காமல்,  நேரடியாக மக்களுக்கு நிதி அளித்துள்ளதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி,  எந்த மக்களுக்கு கொடுத்தார் என சொன்னால் அவர்களிடம் கேட்கலாம் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் நலமா” திட்டம்

அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார்.  அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம்,  முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அனைத்து அரசு அதிகாரிகளும் தமிழ்நாடு மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு மக்களின் குறைகள் குறித்து கேட்டறியவுள்ளனர்.  அந்த கருத்துகளின் அடிப்படையில்,  திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில்,  'நீங்கள் நலமா' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இதையடுத்து தனலெட்சுமி என்ற பெண்ணிடம் மகளிர் உரிமைத்தொகை  திட்டம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.  

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.  அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம்.  புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே,  மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை,  அன்பான அக்கறையைக் காட்டும்.  தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம்.

மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த "நீங்கள் நலமா" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.  நமது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை.  நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது நமது திராவிட மாடல் அரசு.  எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள்.  ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டன.  அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை;  மாறாக,  அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.  இன்னும் சொல்ல வேண்டுமென்றால்,  பேரறிஞர் அண்ணா அவர்கள், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்றாரே,  அதனைத் தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.

அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளது தான்,  "நீங்கள் நலமா?" என்ற திட்டம்.  இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன்.  ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று,  அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.  கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை.  ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பது தான் எனக்கு முக்கியம்.  ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை.

கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை.  ஆகவே,  ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்;  நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்.  அதேசமயம்,  மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.  சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள்,  மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்.

எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.  இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை 8 மாவட்ட மக்கள் சந்தித்தார்கள்.  இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம்.  அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி,  தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?  மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த 8 மாவட்டங்களுக்கு மக்களுக்காக,  மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3,406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும்,  நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசு தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு.

உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம்;  திராவிட மாடல் அரசின் நலம்;  தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம்.  அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த 'நீங்கள் நலமா' திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement