“பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்!” - பாரிவேந்தர் புகழாரம்!
பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி I.J.K. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளு தாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய பாரிவேந்தர், பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக குறிப்பிட்டார். பெரம்பலூர் MP தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை SRM மருத்துவமனையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்களை சிந்திக்க விடாமல், மனதை மாற்றி குடிக்க வைப்பதாகவும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கீழப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தர், கீழப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையான சமுதாய கூடம் கட்டி கொடுக்கப்படும் எனவும், சூரியன் சுட்டெரித்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் அழகிய மணவாளம், கோபுரப் பட்டி,சோழங்க நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக எம்.பி கள் நாடாளுமன்றத்தை முடக்குவது, தடை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாகவும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் தங்களுடைய தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து குருவம் பட்டி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய அவர், தன்னை தேர்ந்தெடுத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படும் எனவும், மத்திய அரசின் நிதியை முழுமையாக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக சிறுகாம்பூர் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அபோது கடந்த 5 ஆண்டுகளில் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதை மட்டுமே செய்து வந்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும் தான் 2019ஆம் ஆண்டு மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாகவும் பாரிவேந்தர் கூறினார்.