நிஜ்ஜார் கொலைவழக்கில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை - #Canada அரசு விளக்கம்!
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக இருநாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் கனடாவில் நிஜ்ஜார் கொலை சதி மற்றும் இதர வன்முறை சதித் திட்டங்களில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கனடா பாதுகாப்பு முகமைகள் சந்தேகிப்பதாக, அந்நாட்டின் 'தி கிளோப் அண்ட் மெயில்' நாளிதழில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. பெயர் கூற விரும்பாத பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகவலை தெரிவித்ததாக, செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, இரு நாடுகளுக்கிடையேயான உறவை இது மேலும் மோசாக்கும் என எச்சரித்தனர். இந்நிலையில் இந்த செய்தியை கனட அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் நாதலே ஜி.திரோயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“கனடாவுக்குள் ஊடுருவிய இந்திய அரசின் ‘உளவாளிகள்’ தொடர்பான பகிரங்கமான குற்றச்சாட்டை கனடா காவல் துறை ஆணையர் மற்றும் பிற உயரதிகாரிகள் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிட்டனர். பொது அமைதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் கனடாவில் நடந்த தீவிரமான குற்ற செயல்பாடுகளில் பிரதமர் மோடி, எஸ்.ஜெய்சங்கர், தோவல் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகவோ, அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவோ அரசுத் தரப்பில் எங்கும் கூறப்படவில்லை. இதுவே உண்மை. இதற்கு மாறான எந்த தகவலும் ஊகத்தின் அடிப்படையிலானது; தவறானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.