வைஷாலிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடர் நடந்து வந்தது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதினார். போட்டி முடிவில், வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"சிறந்த சாதனை. வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நமது சென்னைப் பெண் வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.