நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர்!
பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் சுருக்கமாக பிஎஸ்என்எல் என்பது மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். 1 அக்டோபர் 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் வெள்ளி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு புதிதாக அமைக்கப்பட்ட 97,500 கைப்பேசி கோபுரங்களை காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார். இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.
சுதேசி' 4ஜி சேவையின் சிறப்பம்சங்கள் :
இந்த சுதேசி 4ஜியானது எதிர்காலத்திற்குத் தயாராகவும் தடையற்றதாகவும், 5G க்கு மேம்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொலைதூர, எல்லை மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 26,700க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைப்பு பெறும். இந்தப் புதிய கோபிரங்கள் மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோபுரங்கள் சூரிய சக்தியால் இயங்குகின்றன.