மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது - கனிமொழி எம்.பி. கண்டனம்!
நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர்
அணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று
நடைபெற்றது. பொது கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் எம்.எல்.
ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் சிலிண்டருக்கு ரூ100 குறைத்துள்ளார் மோடி,
பெண்கள் சிலிண்டர் உடன் சமையல் அறையில் தான் இருக்க வேண்டும் என சொல்லாமல்
சொல்கிறார் என்று திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின பொதுக்கூட்டத்தில்
கனிமொழி எம்பி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா!
இது குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது :
"மகளிர் தின விழாவை முன்னிட்டு பிரதமர் சிலிண்டருக்கு ரூ. 100 விலை குறைத்துள்ளார். இந்த விலை குறைப்பு மகளிர் தின விழாவிற்காக அல்ல, தேர்தல் நெருங்குவதால் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் பெண்கள் சிலிண்டருடன் சமையலறையில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.
நியூயார்க் நகரில் பதினைந்தாயிரம் பெண்கள் தங்களது ஓட்டுரிமை, தாங்கள் செய்த
பணிக்கு உரிய ஊதியம், சம உரிமைக்காகவும் போராடி வெற்றி பெற்ற தினம் தான்
மகளிர் தினம், தந்தை பெரியார் பெண்கள் கையில் உள்ள கரண்டியை வாங்கிவிட்டு
அவர்கள் கையில் புத்தகத்தை தர வேண்டும் என்று கூறிய தினம் தான் மகளிர் தினம்.
ஆனால் தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று தேர்தல் வாக்குறுதி கூறி வெற்றி பெற்றபின் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்
வேண்டும் என்பதற்காக புதிய பல தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் பணிபுரிவதற்கு
இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கினார். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதியை குறைத்துக்
கொண்டே வருகிறது, அவர்களது எண்ணமே 100 நாள் வேலைத்திட்டத்தை இல்லாமல் ஆக்குவது தான்.
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளான தென்மாவட்டங்கள் மற்றும் சென்னையை
பார்வையிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலையிலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக எந்த தொகையையும் ஒதுக்க முடியாது என்ற கூறிவிட்டார். ஆனால், நமது தமிழ்நாடு முதலமைச்சர் தென்மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வெள்ளம் பதித்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார்.
தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு தேர்தல் நிதி
வேண்டுமானாலும் வழங்கலாம் என்று கூறி தேர்தல் பத்திரத்தில் ஊழல் செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரு பக்கத்திலும் பாஜகவை ஒரு
பக்கத்திலும் வைத்தால் பாஜக அரசின் சொத்தில் ஒரு பங்கில் கால் பகுதி கூட எதிர்
பக்கத்தில் இருக்கும். மற்ற கட்சிகளுக்கு இல்லை அந்த அளவிற்கு ஊழல் செய்து பாஜக
சொத்து சேர்த்துள்ளனர்.
மேலும் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களை
மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதத்தின் பெயராலும், ஜாதியின்
பெயராலும் பாஜக அரசு ஆட்சி செய்கிறது. டெல்லியில் விவசாயிகள் பிரதமரை தாக்க
செல்லவில்லை அவர்களது கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிக்க செல்கின்றனர். ஆனால், விவசாயிகளை பிரதமர் சந்திக்காமல் அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்காமல் இரும்பு முள்வேலிகளையும், தடுப்புகளையும் வைத்து பாஜக அரசு தடுக்கிறது"
இவ்வாறு திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.