மொபைல் கட்டணங்களின் விலை உயர்வு: இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.47500 கோடி அதிகம் செலவிட வாய்ப்பு - திடுக்கிடும் தகவல்!
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பின்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் (ஜூன் 27) முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.
ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 27% வரையில் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என கூறியது. அதேபோல, ஏர்டெல் நிறுவனமும், தங்கள் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 முதல் 21% உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என கூறியது.
தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமான VI நிறுவனமும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையில் கவனம் செலுத்தவும் உள்ளது என அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் ஜூலை 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
சமீப காலங்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5G தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க பெரும் முதலீடுகளை செய்துள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையைப் பெற 71% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி செலவை (ARPU) 15 முதல் 17% வரை அதிகரித்துள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைஉயர்வு குறித்து, கோடக் நிறுவன பங்குகள் ஆய்வுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.