“ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்” - ரோஜா!
“ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
திருப்பதி மாவட்டம் எர்ரவாரிபாளையம் மண்டலம் எலமெண்ட கிராமத்தில், நேற்று பத்தாம்
வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர்
மீது கத்தியால் தாக்குதல் நடத்தி, முகத்தில் மயக்க மருந்து கலந்த தண்ணீரை
தெளித்து, மயங்கிய மாணவியை இரண்டு பேர் அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச்
சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனிடையே பள்ளிக்கு சென்ற மாணவியை காணாமல் தேடிய பெற்றோர் தங்கள் மகள் புதருக்குள் மயங்கி கிடப்பதை பார்த்து, உடனடியாக திருப்பதியில் உள்ள அரசு உயர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவம் தற்போது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளநிலையில், மாணவி மீது தாக்குதல் மட்டுமே நடந்துள்ளது; பாலியல் வன்கொடுமை எதுவும் செய்யப்படவில்லை என ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், தெலுங்கு தேசம் பொறுப்பேற்றதிலிருந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகமே காரணம் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;
கடந்த 120 நாட்களில் பாலியல் பலாத்காரம், அடித்து கொலை செய்வது, வன்முறையில்
ஈடுபடுவது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான 110 குற்றங்கள் ஆந்திராவில்
நடைபெற்றுள்ளன. ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில உள்துறை அமைச்சர், டம்மி உள்துறை அமைச்சராக செயல்படுகிறார்.
இந்த அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. எனவே ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும். எலமண்ட கிராமத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தை, பல்வேறு விதமான அழுத்தங்களை கொடுத்து, போலீசார் மூலம் பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என்று கூற செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவருடைய குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து
ஆறுதல் கூற ஜெகன்மோகன் ரெட்டி வர இருக்கிறார், என்ற தகவல் வெளியான உடன் ஆட்சி
பொறுப்பில் இருப்பவர்கள் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுத்து பாலியல்
பலாத்காரம் நடைபெறவில்லை என்று கூற செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.” என தெரிவித்துள்ளார்.