மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியா..? - அமித் ஷா , பைரன்சிங் சந்திப்பின் போது நடந்தது என்ன..?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து கோரி வரும் நிலையில், இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இருதரப்பினருக்கும் நில உரிமை பிரச்னைகளும் உள்ளன. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், மணிப்பூர் மாநிலம் கடந்த ஏப்ரல் மாதம் மாதம் முதல் பற்றி எரிந்தது. லட்சக்கணக்கான குகி இனத்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம், குகி இனத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமபவம் நடைபெற்று 4 மாதங்களுக்கு பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
கலவரம் , துப்பாக்கிச்சூடு மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடங்கி 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இருதரப்பிலும் சர்வ சாதரணமாக ஆயுதங்கள் புலங்குவதாகவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சிரமமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட தௌபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் மூவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து 3 கார்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறை காரணமாக மைதேயிகள் அதிகமாக வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தௌபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் நிலைமைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் பைரன் சிங் தெரிவித்ததாவது..
“ மாநில நிலவரம் குறித்து உள்துறை அமமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்களை விவாதித்தேன். மணிப்பூர் மாநில மக்களின் நலனுக்காக மத்திய அரசு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.