அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து - பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்காவில் கியூபா, வெனிசூலா, நிகராகுவா மற்றும் ஹைத்தி மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த மக்களை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை ரத்து செய்து 30 நாட்களில் அவர்களை வெளியேற்றப் போவதாக கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த காலக்கெடு வருகின்ற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஸ்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா தல்வானி, அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் சமூக பாதுகாப்பு எண்களை ரத்து செய்து அவர்களை இறந்தவர்களாக வகைப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வேலை, வங்கி பயன்பாடு உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெற முடியாமல் அவர்களாகவே வெளியேறும் நிலை உருவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.