உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.
அப்போது ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறினார். ஆனால், போரை நிறுத்தினால் எதிர்காலத்தில் ரஷியாவின் தாக்குதல் இருக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன இருக்கிறது? என ஜெலன்ஸ்கி கேட்டார். இதனால் போரை நிறுத்தும் முடிவில் உக்ரைன் இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில், உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது சர்ச்சையானது. இந்த சூழலில், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ரஷியாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் வெளியிட்டு உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு பகுதியாக புதிதாக பொருளாதார தடைகள், அதிக வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரித்து உள்ளார்.
ரஷியாவும், உக்ரைனும் இருவரும் காலதாமதம் ஏற்படுவதற்கு முன், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது என்ற உண்மையின் அடிப்படையில், நான் மிக பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் ரஷியா மீது விதிப்பது என நான் கடுமையாக பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.